இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
இலங்கை பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவினால் (COPA) இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு திருப்திகரமான செயற்பாடுகளுக்கான (Satisfactory Performance) சான்றிதழ் இன்று (2023.08.29) இராஜாங்க அமைச்சரும் பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) தலைவருமான கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களின் தலைமையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டுக்கான செயற்பாடுகளின் அடிப்படையில் 2021/2022 காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட மேற்படி மதிப்பீடுகளின் போது பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் இச்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலிருந்து இச்சான்றிதழைப் பெற்றுக் கொண்ட ஒரேயொரு உள்ளூராட்சி மன்றம் அக்கரைப்பற்று மாநகர சபை மாத்திரமேயாகும் என்பதும் விசேட அம்சமாகும்.
முன்னாள் மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி அவர்களின் வழிகாட்டலில் தற்போதைய மாநகர ஆணையாளர் ATM. றாபி அவர்களின் தலைமையில் மாநகர சபையின் அனைத்து அலுவலர்களினாலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் முதற் தடவையாக இவ்வாறானதொரு சான்றிதழை அக்கரைப்பற்று மாநகர சபை பெற்றுக் கொண்டுள்ளது என்பது அக்கரைப்பற்று மாநகர சபையின் செயற்பாடுகளுக்கும் அதன் அலுவலர்கள்/ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த ஓர் அங்கீகாரமாகும்.
இம்மதிப்பீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி, மாநகர ஆணையாளர் ATM. றாபி, மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் கணக்காளர், செயலாளர், பொறியியலாளர், கால்நடை வைத்திய அதிகாரி, நிதி/திட்டமிடல்/நிருவாக பிரிவுகளின் பிரதம முகாமைத்து சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள்/ஊழியர்கள் அனைவருக்கும் மாநகர சபை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது.