சிறந்த உள்ளூராட்சி மன்றத்திற்கான விருது அக்கரைப்பற்று மாநகர சபைக்கு..
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்கின்ற “சுவர்ணபுரவர – 2024” போட்டி நிகழ்ச்சியில் அக்கரைப்பற்று மாநகர சபை திறமையான செயற்பாடுகளுக்கான விருதினை வென்றெடுத்துள்ளது.
இலங்கையில் காணப்படும் சுமார் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியின் விருது வழங்கும் நிகழ்வு 25.07.2024 வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற போது அக்கரைப்பற்று மாநகர சபைக்கு கௌரவ மாகாண சபைகள் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர அவர்களினால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் திரு. ATM. றாபி அவர்கள் ராஜாங்க அமைச்சரிடம் இருந்து விருதினை பெற்றுக் கொண்டதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. PM. ஹாரிஸ் அவர்கள் சுற்றாடல் அமைச்சின் செயலாளரிடமிருந்து மாநகர சபைக்கான சான்றிதழினை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று மாநகர சபையானது தற்போதைய ஆணையாளரின் தலைமையின் கீழ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்போடு அண்மைக்காலமாக தொடர்ச்சியாக விருதுகளை வென்றெடுத்து வருகின்றதோடு அண்மையில் பாராளுமன்றத்தின் பொது கணக்குகள் குழுவினால் (COPA) நடத்தப்பட்ட மதிப்பீட்டில் மாநகர சபை பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் இரண்டாவது இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வுகள் எதிர்வரும் மாதங்களில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் மேம்படுத்தி இவ்வாறான விருதுகளை வென்றெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள், கணக்காளர், செயலாளர், நூலகர், பிரிவுகளின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அனைத்து அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மாநகர ஆணையாளர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்.