ஜனநாயகத்தின் அதிகாரம் உள்ளூர் ஆளூகையால் அமையப் பெறுகின்றது. பிரதேச ரீதியாகத் தோன்றும் பிரச்சினைகளுக்குப் பிரதேச ரீதியாகத் தீர்வு காண்பதும், பிரதேச ரீதியான அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக மேற்கொள்வதும் மக்களால் மக்களுக்கான ஆட்சியின் அடிப்படையாகும். அந்த வகையில் ஆரம்பத்தில் சுகாதார சபை, கிராமாட்சி மன்றம், கிராம சபை, அக்கரைப்பற்று மத்திய கிராமாட்சி மன்றம் என்ற பெயர்களில் இயங்கி உள்ளூர் மக்களுக்கான ஜனநாயக ஆட்சியினை மேற்கொண்டிருந்தது. பின் 1988ஆம் ஆண்டளவில் கருங்கொடித்தீவு பிரதேச சபை எனவும், 1999ஆம் ஆண்டு முதல் அக்கரைப்பற்று பிரதேச சபை எனவும் அதிகாரங்களைப் பெற்று உள்ளூராட்சி செயற்படுத்தப்பட்டிருந்தது.
அக்கரைப்பற்று பிரதேச சபையினது முழு அதிகார ஆள்புலப் பிரதேசமும் 01.04.2011ஆந் திகதி முதல் செயற்படும் வண்ணம் இரு உள்ளூர் அதிகார சபைகளாகத் தோற்றம் பெற்றன. முழு அக்கரைப்பற்று பிரதேசத்தினதும் கிழக்கு பிரதேசம் அக்கரைப்பற்று மாநகர சபையாகவும், மேற்குப் பிரதேசம் அக்கரைப்பற்று பிரதேச சபையாகவும் பிரகடணப்படுத்தப்பட்டன.
மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் 2011.03.18ஆந் திகதி மாநகர சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 09 பிரதிநிதிகளையும் உள்ளடக்கி சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மாநகராட்சியின் முதலாவது மாநகர முதல்வராக கௌரவ அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். அவரின் தலைமையில் செயற்படத் தொடங்கிய மாநகர சபை மக்களுக்குத் தேவையான சேவைகளை பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டுவந்தது. அத்துடன் மாநகர சபையின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அக்கரைப்பற்று மண்ணில் மிகவும் நேசம் கொண்ட கௌரவ உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அவர்களின் பணிப்பின் பேரில் மாநகர சபைக்கான புதிய ஆளணி அனுமதிக்கப்பட்டு தேவையான ஆளணியின் பெரும்பகுதி பெற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் தேவையான வாகனங்கள், இயந்திரங்கள் போன்ற பௌதீக வளங்கள் அனைத்தும் இனங்காணப்பட்டு தேவைக்கேட்ப கௌரவ அமைச்சர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் இச்சபைக்குப் பாரிய சவாலாக அமைந்திட்ட நிதிப்பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் முகமாக சபையின் வருமான மூலங்கள் இனங்காணப்பட்டு அவற்றை திரட்டுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகளும் நிறைவுபெற்றுள்ள இந்நிலையில் பலநூறு மில்லியன் பெறுமதியான இந்த நவீன மாநகர சபை கட்டடமும் கௌரவ அமைச்சர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டு மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.
ஆட்சித்துறையாயினும் அல்லது நிர்வாக துறையாயினும் அங்கு பெரிதும் வேண்டப்படுவது நல்லாட்சி – வெளிப்படைத் தன்மை என்பனவே. இவற்றிற்கு முன்னுதாரணமாக அக்கரைப்பற்று மாநகர சபை திகழுகின்றதென்பது பொதுமக்களினதும் சமூக குழுக்களினதும், அரச அதிகாரிகளினதும் கருத்துக்களாகும். இதற்கு ஊழலற்ற ஜனநாயக முறையிலான நீதியான வெளிப்படையான நல்லாட்சியும் வினைத்திறனான நிர்வாகக் கட்டமைப்பையும் சிறந்த வழிகாட்டலுடனும் கூடிய தலைமைத்துவமும், ஒற்றுமையும், சகோதர மனப்பாங்கும், மனிதநேயமும், தூரநோக்குச் சிந்தனையும் காரணமாக அமைந்து விட்டன.
6.507 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள நகரில் வசிக்கும் 40,000 மக்கள் பயன்படத்தக்க வகையில் வீடு வீடாகச் சென்று கழிவுகளை சேகரிக்கும் செயற்பாடானது உண்மையில் வியக்கத்தக்கதாகும். இப்பணிகளை திறம்பட செயற்படுத்துவதற்குத் தேவையான வாகனங்களும் ஏனைய பௌதீக வளங்களும் தற்போது போதுமான அளவிற்கு காணப்படுகின்றது. மாநகரில் அமையப்பெற்றுள்ள அனைத்து வீதிகளும் தற்போது இருளின்றி வெளிச்சமூட்டப்பட்டுள்ளன. இதற்குப் போதுமான அளவு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு தினந்தோறும் பராமரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக மக்களிடமிருந்து பெறப்படுகின்ற முறைப்பாடுகள் உடனடியாக நிவர்த்திக்கப்படுகின்றன. மற்றும் மாநகர சபையால் பராமரிக்கப்படுகின்ற ஆயுர்வேத வைத்தியசாலைக்குத் தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து இலவச மருத்துவ சேவையினைப் பெற்றுச் செல்கின்றனர்.
இவை தவிர ஹல்லாஜ் தகவல் வள நிலையம், பொதுநூலகங்கள், அதாஉல்லா அரங்கம், நவீன பஸ் நிலைய வளாகம், நவீன பொதுச்சந்தைக் கட்டிடத் தொகுதி போன்றனவும் இன்று காலத்தின் தேவைக்கேட்ப மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. தற்போது மாநகர சபையின் உள்ளக வீதி அபிவிருத்திப் பணிகள் நன்கு திட்டமிடப்பட்டு பாரிய வலைப்பின்னல் ஒன்றினூடாக 'காப்பட்' வீதிகளாகவும் 'கொங்கிறீட்' வீதிகளாகும் மிகவும் சிறப்பாக அமையப்பெற்றுள்ளன. இவ்வீதிகளுடன் இணைந்ததாக வடிகான்களின் அபிவிருத்தியும் மிக உன்னதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநகர சபையானது 12 வட்டாரங்களையும் 20 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
Mayor's name
Year
Hon. A. Ahamed Zackie
2011
Hon. A. Ahamed Zackie
2018
Mayor - Council System
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2011.01.06ஆம் திகதி 1687/30ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலுக்கமைவாக, 2011.04.01ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் பிரகடணப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக முதன்முதல் தெரிவு செய்யப்பட்டேன்.